×

பூந்தமல்லி ஒன்றியத்தில் ரூ.3 கோடியில் வளர்ச்சி பணிகள்: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், க.பத்மாவதி கண்ணன், லோ.ஜெயஸ்ரீ லோகநாதன், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன், எஸ்.சிவகாமி சுரேஷ், எஸ்.பிரியா செல்வம், எஸ்.உமா மகேஸ்வரி சங்கர், பி.டில்லிகுமார், வி.கன்னியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், ஒன்றிய குழு உறுப்பினர் என்.பி.மாரிமுத்து பேசுகையில், `தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பசுமை வீடுகள், தொகுப்புகள் மற்றும் ஆடு, மாடுகளை பயனாளிகளை தேர்வு செய்து வழங்க ஊராட்சி தலைவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதுபோல், ஒன்றிய குழு உறுப்பினர்களும் பயனாளிகளை தேர்வு செய்து வழங்கும் வகையில் பசுமை வீடுகள், தொகுப்புகள் மற்றும் ஆடு, மாடுகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றார். பின்னர் ஒன்றியக் குழு உறுப்பினர் சத்யபிரியா முரளி கிருஷ்ணன் பேசுகையில், `வெள்ளவேடு, மேல்மணம்பேடு, கீழ்மணம்பேடு ஊராட்சிகளில் அமைந்துள்ள சமுதாயக் கூடங்கள் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே கழிவறை மற்றும் சமையல் கூடங்கள் அமைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியும், மேல்மணம்பேடு பகுதியில் புதிதாக சமுதாயக்கூடம் அமைத்துத் தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

தொடர்ந்து, ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் பேசுகையில், `ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதில் மத்திய நிதி குழு மானியம் 2021-2022ம் ஆண்டிற்கான பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் வரையறுக்கப்பட்ட பணிகள் சுகாதாரம் 60 சதவீதம் குடிநீர், சுகாதார பணிகள் மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் செய்வதற்கும், 40 சதவீதம் சாலை பணிகள் ஊராட்சியில் செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சோராஞ்சேரி ஊராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைப்பது, சென்னீர்குப்பம் ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது, கொளப்பன்சேரி ஊராட்சியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகள் அமைப்பது, குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.22 மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பது, நசரத்பேட்டை மற்றும் சித்துக்காடு ஊராட்சிகளில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Poonamallee Union ,Union Committee , Rs 3 crore development works in Poonamallee Union: Resolution of Union Committee Meeting
× RELATED தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில்...